Pages

Tuesday 14 August 2012

அழைப்புப் பணியின் அவசியம் (தொடர் - 4)...
Tntj Tabuk Maa 5:08am Aug 14
அழைப்புப் பணியின் அவசியம் (தொடர் - 4)
அபிப்பிராய பேதத்தின் ஆரம்பம்.....!!!!!

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்]
அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே! அழைப்புப் பணியின் அவசியத்தை அனைவரும் அறிந்து கொள்வோம் வாருங்கள்!!!

அபிப்பிராய பேதத்தின் ஆரம்பம்:

இந்திய திருநாட்டிலும் உலகின் பல பாகங்களிலும் பல்வேறுபட்ட இஸ்லாமிய அமைப்புக்கள் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து அவைகள் பிரச்சாரம் புரிவதற்கு தஃவாவிற்காக ஒவ்வொரு குழுவும் தேர்ந்தெடுத்திருக்கும் அணுகு முறைகள் தான் முக்கிய காரணியாய்த் திகழ்கின்றன.

எதைப்பற்றி மக்களுக்கு போதிக்க வேண்டும்? எதற்கு எந்தளவில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? என்ற கேள்விக்குப் பலரும் பல விதத்தில் பதிலளிக்கின்றனர்.

இன்றைய இஸ்லாமிய “உம்மத்” அதன் அடிப்படைக் கடமையான தொழுகையைப் புறக்கணித்து வழிகேட்டில் சென்று கொண்டிருக்கின்றது.

எனவே, தொழுகைக்காக அழைப்பது அவசியமானதாகும். இதனடிப்படையில் தஃவத் என்றாலே தொழுகைக்காக அழைப்பதுதான் என்பதுபோல்; சில சகோதரர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

சரியானதொரு இஸ்லாமிய சமூக அமைப்பைத் தோற்றுவிக்காமல் நாம் எவ்வளவுதான் பிரச்சாரம் புரிந்தாலும் ஜாஹிலிய்யத்தான சமூக முறையைப் பின்பற்றி வரும் மக்களுக்கு அது எத்தகைய பிரயோசனத்தையும் அளிக்கப் போவதில்லை.

எனவே, இஸ்லாமிய சமூக அமைப்பொன்றைத் தோற்றுவிப்பதற்கான அழைப்பே தற்போது அவசியமானதாகும் எனக் கருதுவோர் சிலர்.
என்னதான் பெரிதாகப் போதனை செய்தாலும் அதிகாரம் இல்லாவிட்டால் அதன் பயனைப் பூரணமாகப் பெறமுடியாது போய்விடும். எனவே, இஸ்லாமிய ஆட்சி ஒன்றை நிறுவுவது அவசியமானது.

ஆட்சி அமையப் பெற்றுவிட்டால் ஆயிரம் பயான்காளால் செய்ய முடியாததைக் கூட ஒரு கட்டளை மூலமாகச் செய்து விடலாம். எனவே, ஆட்சியை இலக்காகக் கொண்டதாகவே எமது தஃவா அமைய வேண்டும். அந்த இலக்கை நோக்கி நகரும் போது இடையில் குறுக்கிடும் சில விஷயங்களை நாம் அலட்டிக்கொள்ளக் கூடாது.

எமது இலக்கு விரிவானது. அதனை அடையக்கூடியதாகவே எமது தஃவா அமைய வேண்டும் எனச் சில சகோதரர்கள் எண்ணுகின்றனர்.
என்னதான் ஒருவன் பெரிய “இபாதத்” செய்தாலும் அவன் “ஷிர்க்” செய்து விட்டால் அவனது வணக்கங்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றன.

அதே போன்று வணக்க வழிபாடுகளில் “பித்அத்” எனும் புதியன புகுந்திருந்தால் அல்லாஹ்வால் அவைகள் ஏற்கப்படமாட்டா.
எனவே, ஷிர்க் பித்அத் பற்றி எச்சரிக்கை செய்வதே அவசியமானதாகும் எனக் கருதுகின்றனர் சிலர்.

மேலே நாம் கூறிய அத்தனையும் தஃவாவின் முக்கிய அங்கங்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. அதே வேளை யானை பார்த்த குருடர் போல் இதுதான் “தஃவா” வெனக் கூறி “தஃவத்”தின் வட்டத்தைச் சுருக்கிவிடவும் கூடாது.

மார்க்கத்தை மறைக்கலாமா?

அதுபோல் “தஃவா”வில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வெண்டும் என்பதில் அபிப்பிராயப் பேதப்பட்டிருக்கும் சகோதர அமைப்புக்களுக்கிடையே சில விஷயங்களை மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டுமா இல்லையா என்பதிலும் கருத்து முரண்பாடுகள் நிலவி வருகின்றன.

மார்க்கத்தில் (ஏற்கனவே சொல்லப்பட்ட) சில விஷயங்களை மக்கள் மன்றத்தில் வைத்தால் மக்கள் குழப்பமுறுவர். எனவே அந்த சில விஷயங்களை நாமும் செய்யாமல் பிறருக்கும் சொல்லாமல், பிறர் அவை பற்றி கேட்டால் கூட அவை பற்றி விவரிக்காமல் விட்டு விட வேண்டும். இதுவும் அல்குர்ஆன் கூறும் “தஃவா” அமைப்பே எனச்சில சகோதரர்கள் கருதுகின்றனர்.

“நேர்வழியையும் தெளிவான அத்தாட்சிகளையும் நாம் அருளி அவற்றை மனிதர்களுக்காக வேதத்தில் தெளிவுபடுத்திக் கூறிய பின்னும், எவர்கள் (அவற்றை) மறைக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ்வும் சபிக்கிறான். (மற்றும்) சபிப்போரும் அவர்களை சபிக்கின்றனர்”. (2:159)

அல்லாஹ்வே வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் அவற்றில் சிலதை மறைத்துத்தான் “தஃவா” செய்ய வேண்டு மென்பது கண்டனத்துக்குரிய ஒன்று என்பதை மேற்படி வசனம் தெளிவு படுத்துகின்றது.

அல்லாஹ் எம்மைவிட எதைச் சொல்ல வேண்டும்? எதைச் சொல்லக் கூடாது என்பதை அறிந்தவனல்லவா? அல்லாஹ்வின் கட்டளை களை மக்களுக்கு எடுத்துச் சொல்பவனே அழைப் பாளனாவான். அதை விட்டு விட்டு அல்லாஹ் கூறியவற்றில் சிலதை மக்களுக்குச் சொல்ல முடியாது என “சென்ஸார்” (தணிக்கை) செய்யும் மேலதிகாரியல்லவே அவன்.

மக்கள் குழப்பமுறுவர் என்பதைக் காரணம் காட்டி சத்தியத்தை மூடி மறைப்பது அர்த்தமற்றதாகும்.

இதைச் சொன்னால் இவர்கள் ஏற்பார்கள்; இதைச் சொன்னால் இவர்கள் ஏற்க மாட்டார்கள் என நாமாக முடிவு செய்வது இஸ்லாத்தின் பார்வையில் குற்றமாகும். இதனை அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரழி) அவர்கள் சம்பந்தப்பட்ட அவர் பரிசுத்தவானாக ஆகிவிடக் கூடும் என்பதை உமக்கு எது அறிவித்தது” எனக் கூறும் அல்குர்ஆனின் எண்பதாவது அத்தியாயம் மிகத் தெளிவாக உணர்த்துகின்றது.

இஸ்லாத்தை எடுத்துச் சொல்லும் கட்டாயமே நமக்கு உண்டு, அதனை ஏற்பதற்குரிய மனோபக்குவத்தை அல்லாஹ் தான் கொடுக்க வேண்டுமேயல்லாமல் நாமாக முயன்று அதைச் செய்து விட முடியாது.
இதற்கான பல சான்றுகளை அல்குர்ஆனில் காணலாம். நாம் சொல்லும் சத்தியத்தை ஏற்றுக் கொண்டால் இருவகையான கூலிகள் கிடைக்கும். அது மறுக்கப்பட்டால் நமது கடமை நீங்கிவிடும்.

சத்தியத்தை மறுப்போர் பற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
உண்மை தெளிவாக இருக்கும் போது அதிலிருந்து தடம் புறழ்வோர் பற்றி இஸ்லாம் பின்வருமாறு கூறுகின்றது.

“இதை (அல்லாஹ் கூறுகின்ற உதாரணத்தை) கொண்டு அவன் அநேகரை வழி கெடும்படி செய்கின்றான். அநேகரை நேர்வழி பெறும் படியும் செய்கின்றான். (ஆனால் இவ்வேதத்தை மனமுரண்டாக நிராகரிக்கும்) பாவிகளைத்தவிர (மற்றவர்) இதைக் கொண்டு வழிகெடும்படி அவன் செய்ய மாட்டான்.” (2:26)

“உங்களை இரவும் பகலைப் போன்ற வெள்ளை வெளேர் என்கின்ற தெளிந்த நிலையில் விட்டுச் செல்கின்றேன். தெளிவான இம்மார்க்கத்திலிருந்து எனக்குப் பின்னர் அழிந்து நாசமாகுபவனைத் தவிர வேறு எவனும் வழி கெட மாட்டான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மாஜா)

சத்தியத்தைச் சொல்லும் போது பாவிகளும், அழிந்து நாசமாகக் கூடியோரும், உள்ளங்களுக்கு முத்திரை குத்தப்பட்டோரும் மறுக்கவே செய்வர். இவர்கள் மறுப்பார்களே என்பதற்காக சத்தியத்தை ஏற்கும் மனோபக்குவம் பெற்ற விசுவாசிகளிடம் கூட உண்மை சென்றுவிடா வண்ணம் மூடி மறைப்பதும், முலாம் பூசுவதும் பெரும் அநியாயமும் அறியாமையுமாகும்.

இவ்வறியாமையை நீக்குவான் வேண்டி, இவ்வகையான எண்ணத்திற்கு அடிப்படைக்காரணமாய் அமைந்த மாற்றுக் கருத்துடைய நண்பர்கள் தமக்குச் சான்றாக எடுத்து வைக்கும் அல்குர்ஆன் வசனங்களின் உண்மைப் பொருள் யாது என்பது பற்றி இன்ஷா அல்லாஹ் அடுத்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.

No comments:

Post a Comment